விருச்சிகம்

செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசியில் பிறந்த நீங்கள், ‘ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் ஒன்றும் புதிதல்ல’ என்பதுபோல், எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், உங்களை நீங்களே தேற்றிக் கொள்வீர்கள். எதையும் விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருப்பீர்கள். பதுங்கிப் பின்பு பாயும் புலியைப் போன்றவர்கள் நீங்கள்.

பூமிகாரகரான செவ்வாய் உங்களின் ராசி அதிபதியாக வருகிறார். எனவே, சிறிய அளவிலாவது உங்கள் பெயரில் சொத்து எப்போதும் இருக்கும். சிலருக்கு இரும்புச் சத்துக் குறைபாடு இருக்கும். உங்கள் ராசிக்கு ருண, ரோக, சத்ரு ஸ்தானமான 6-ம் இடத்துக்கு அதிபதியும் செவ்வாய் என்பதால், பலருக்கு ரத்த அழுத்தம், முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். உங்களைப் பொறுத்தவரை, உங்களுடைய பேச்சே உங்களுக்கு எதிரி!

2-ம் இடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்துக்கு அதிபதி குரு ஆவார். வாழ்க்கையின் பிற்பகுதியில் பணவரவு, சேமிப்பு போன்றவை உண்டு. உங்கள் வாழ்க்கைத் துணையைப் பற்றிச் சொல்லும் 7-ம் இடத்துக்கு அதிபதி சுக்கிரன் என்பதால், உங்களுடைய வாழ்க்கைத் துணைவர் ஏதேனும் ஒரு வகையில் பிரபலமாக இருப்பார். கலைகளில் மிகவும் ஆர்வத்துடன் இருப்பார். உங்களிடம் மிகுந்த அன்போடு இருப்பதுடன், ஒரு நண்பரைப்போல் பழகுவார்.

சயன ஸ்தானம் என்னும் 12-ம் இடத்துக்கும் சுக்கிரனே அதிபதி என்பதால், நான்கு நாட்கள் வேலை செய்தால் இரண்டு நாட்கள் சுகமாக இருக்க விரும்புவீர்கள். அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்று வருவீர்கள். பயணங்களை விரும்பும் நீங்கள் அதற்காகவே பணம் சேர்ப்பீர்கள்.

விருச்சிக ராசிக்கு அதிபதியாக செவ்வாய் இருப்பதால், ஞானியர்களையும், மகான்களையும் தரிசித்து வணங்குவது நலம். மேலும், செவ்வாய்க்கு எதிர் குணங்களைக் கொண்ட அனுஷத்துக்கு அதிபதியாக சனியும், கேட்டைக்கு அதிபதியான புதனும் வருவதால், நன்றாக சுகபோகங்களுடன் வாழும்போதே வாழ்க்கையின் நிலையாமை குறித்தும் சிந்திப்பீர்கள். காடுகளிலும் மலைப்பகுதிகளிலும் சுற்றித் திரியும் சித்தர்கள் என்றால், உங்களுக்குக் கொள்ளைப் பிரியம். மிகப் பழைமையான தலங்களையும், அங்கிருக்கும் சித்தர்களின் ஜீவ சமாதிகளையும் தரிசித்து வழிபடுவது நல்லது.

அப்படி ஜீவசமாதி அமைந்திருக்கும் தலம்தான் நெரூர். இந்தத் தலத்தில் உள்ள சிவாலயத்துக்குப் பின்புறம்தான் சதாசிவ பிரம்மேந்திரர் என்னும் மகாஞானியின் ஜீவ சமாதி அமைந்துள்ளது.

உங்கள் ராசியில் சந்திரன் நீசமாவதால் சட்டென்று புத்தி வேலை செய்யாது. திடீரென்று பிரச்னை வரும்போது என்ன செய்வதென்று தெரியாமல் விழிப்பீர்கள். அதுபோன்ற சந்தர்ப்பங்களில், நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் எல்லாம் இத்தலத்தை தரிசித்த மாத்திரத்தில் நீங்கும். இத்தலம் கரூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது.