குரு பெயர்ச்சி பலன்கள்

  

- 2025

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

மேஷம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

லட்சிய கனவுகளுடன் வாழும் மேஷ ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு விரையஸ்தானமான மீனராசியில் அமர்ந்து செலவுகளையும், தேவையற்ற மனஸ்தாபங்களையும் தந்து கொண்டிருந்த குருபகவான் தற்போது உங்கள் ராசியிலேயே ஜன்ம குருவாக அமர இருக்கிறார். 22.4.2023 முதல் 1.5.2024 வரை மேஷ ராசியிலேயே சஞ்சாரம் செய்ய இருக்கும் குருபகவான் இனி எப்படிப்பட்ட பலன்களைத் தர இருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.

குருபகவான் உங்கள் ராசிக்குப் பிரபல யோகாதிபதி. எனவே ராசியில் குரு சஞ்சரிக்கும் காலகட்டத்தில் நற்பலன்களும் ஏற்படும். அவரே ராசிக்கு விரையஸ்தானாதிபதியாகவும் அமைவதால் நற்பலன்களும் விரைய செலவுகளையும் கலந்தே தருவார்.

ஜன்மகுரு காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சின்னச் சின்ன உபாதைகளையும் அலட்சியம் செய்யாமல் மருத்துவம் நாட வேண்டிய நேர இது. யோகா, தியானம் மற்றும் உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம். எடுத்த காரியங்களை முடிப்பதில் அலட்சியமும், சோர்வுவும் காட்டக்கூடாது. குலதெய்வ வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

என்றாலும் ராசிக்கு 5,7,9 ம் வீடுகளை குருபார்ப்பதால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். மகன் அல்லது மகளின் திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். பழைய வாகனத்தை மாற்றிப் புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவழி சொந்தங்களால் ஆதாயமுண்டு. வெகுநாட்களாக வராமலிருந்த பணம் தக்கசமயத்தில் வந்து கை கொடுக்கும். தந்தையின் உடல்நிலை சரியாகும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

22.4.2023 முதல் 23.6.2023 வரை மற்றும் 23.11.2023 முதல் 06.02.2024 வரை

இந்தக் காலகட்டங்களில் குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் அசுவனி நட்சத்திரக்காரர்களுக்கு தேவையற்ற வெறுப்பும் சலிப்பும் ஏற்பட்ட வண்ணம் இருக்கும். பொருளாதார விஷயங்களில் ஒருமுறைக்கு இருமுறை நன்கு யோசித்துச் செயல்படுங்கள். யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். குடும்பத்தினரோடு கூடுதல் அன்பும் பற்றும் வையுங்கள்.

23.6.2023 முதல் 22.11.2023 வரை மற்றும் 6.2.2024 முதல் 17.4.2024 வரை

குருபகவானின் சஞ்சாரம் பரணி நட்சத்திரத்தில் இணைவதால் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகம் நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது. மனதளவில் நேர்மறையான விஷயங்களையே நினைக்க வேண்டும். அடிக்கடி மனச்சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளதால் உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

17.4.2024 முதல் 1.5.2024 வரை

குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் சஞ்சாரம் செய்வதால் அந்த பாதத்தில் பிறந்தவர்களுக்கு அசதி, சோர்வு, மன இறுக்கம், ஏமாற்றம் வந்து போகும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம் - 11.9.2023 முதல் 20.12.2023 வரை

குருபகவான் இந்தக் காலகட்டத்தில் அசுவினி மற்றும் பரணி நட்சத்திரங்களில் வக்ர கதியில் சஞ்சாரம் செய்வதால் அனைத்திலும் வெற்றிகிடைக்கும். எதிரிகளின் சூழ்ச்சிகளை வெல்வீர்கள். வெற்றிகள் குவியும். இழுபறியாக இருந்த சொத்துகள் கைக்கு வரும். வீட்டில் வசதிகள் பெருகும்.

வியாபாரிகள் : சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வது நல்லது. அறிமுகமில்லாத அல்லது அனுபவம் இல்லாத நபர்களின் ஆலோசனையைக் கேட்டுப் பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். ஜூன், பிப்ரவரி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட், உணவுக்கூடம், கெமிக்கல், ஏற்றுமதி&இறக்குமதி, கமிஷன் வகைகளால் ஆதாயம் அதிகரிக்கும். பிரச்னைகள் அதிகரித்தாலும் பெரியளவில் பாதிப்புகள் இருக்காது.

உத்தியோகஸ்தர்கள் : மனப்போராட்டங்கள் ஒருபக்கம் இருந்தாலும், மேலதிகாரியின் ஒத்தாசையால் கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும். மேலதிகாரிகள் மதிப்பார்கள். சவால்களை, பிரச்சனைகளை சமாளிக்க புது தெம்பு பிறக்கும். புது வாய்ப்புகள் வரும்போது அவசரப்படாதீர்கள். கௌரவப் பதவிகள் தேடிவரும். என்றாலும் அதனால் பணிச்சுமையும் அதிகரிக்கும். பதவியுயர்வுக்காக தேர்வு எழுதி வெற்றி பெறுவீர்கள். ஜூன், பிப்ரவரி மாதங்களில் சம்பளத்துடன், சலுகைகளும் கூடும்.

ஆகமொத்தம் இந்த குருப் பெயர்ச்சி வாழ்வின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொடுத்து முன்னேறும் வழியைக் கொடுக்கும்.