மகரம்

மகரம் என்பது கடல் வீடு. கடலின் அலைகள் எப்படி அடுத்தடுத்து வந்துகொண்டு இருக்கின்றனவோ அப்படி உங்கள் மனதிலும் புதுப்புது எண்ணங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும். எப்போதும் மற்றவர்களிடம் ‘புது ஐடியா இருந்தால் சொல்லுங்கள்’ என்று கேட்டபடி இருப்பீர்கள். சோர்வு அடையமாட்டீர்கள். வாழ்க்கையில் தோல்வி அடைந்து அதலபாதாளத்துக்குச் சென்றாலும், மறுபடியும் வீறுகொண்டு எழுந்து நிற்பீர்கள். உங்கள் ராசிக்கு அதிபதி, இரக்க சுபாவத்தை அதிகம் கொடுக்கும் சனி என்பதால், மனிதநேயத்தோடு செயல்பட விரும்புவீர்கள்.

2-ம் இடமான தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்துக்கும் சனி அதிபதி என்பதால், அதிக அளவில் பணம் வைத்துக் கொண்டிருந்தாலும், திடீர் என்று ஏற்படும் செலவுகளுக்காகப் பணத்தைத் தேடுவீர்கள். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை ஏற்ற இறக்கங்கள் இருக்கவே செய்யும்.

வாழ்க்கைத் துணையைப் பற்றிச் சொல்லும் 7-ம் இடத்துக்கு அதிபதியாக சந்திரன் வருகிறார். உங்களுடைய வாழ்க்கைத் துணை கலாரசனை மிக்கவராக இருப்பார். உங்களைவிடவும் நிதானமாக யோசித்துச் செயல்படுபவராக இருப்பார். உங்களின் வேகமான செயல்பாடுகளை விவேகத்துடன் சமாளிப்பார். வாக்கு சாதுர்யம் பெற்றிருப்பார்.

10-ம் இடத்துக்கு அதிபதியாக சுக்கிரன் வருவதால், வாழ்க்கையின் மத்தியப் பகுதியில் சொந்தத் தொழிலில் இறங்குவீர்கள். கன்ஸ்ட்ரக்‌ஷன் தொழிலில் ஈடுபட்டு லாபம் சம்பாதிப்பீர்கள். எங்கே பணமும் புகழும் சேர்ந்து கிடைக்குமோ அங்கே வேலை செய்யவே விரும்புவீர் கள். உயர்ந்த பதவி யோகம் உண்டு. சுக்கிரனின் ஆதிக்கம் காரணமாக கலைத் துறையினருடன் எப்போதும் தொடர்பு கொண்டிருப்பீர்கள். உங்கள் ராசிக்கு 12-ம் இடத்துக்கு அதிபதியாக குரு இருப்பதால், உங்களின் செலவுகள் ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் இருப்பது உங்களுக்கு நன்மை தருவதாக அமையும்.

சனியின் பூரண ஆதிக்கத்தில் பிறந்திருக்கும் உங்களுக்குத் திருமாலிடம் மாறாத பக்தி இருக்கும். சிவாம்சத்தின் சாரமாக சனி இருந்தாலும், பெருமாளை வழிபடுவதையே மிகவும் விரும்புவீர்கள். கடல் என்பது சனி பகவானின் ஆதிக்கத்துக்கு உட்பட்டது. மகரத்தை மகரக் கடல் என்றே அழைப்பார்கள்.

பாற்கடலில்தான் மகாவிஷ்ணு சயனக் கோலம் கொண்டிருக்கிறார். எனவே, சயனக் கோலத்தில் மகா விஷ்ணு அரங்கநாதப் பெருமாளாக சேவை சாதிக்கும் கோயில்கள் அனைத்தும் நீங்கள் வழிபட உகந்தவை ஆகும். குறிப்பாக, திருக்கடல்மல்லை என அழைக்கப்படும் மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாளை வழிபட, சிறப்பான பலன்கள் உண்டாகும்.